பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்றால் என்ன?
பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (பிஎம்எம்விஒய்) என்பது மத்திய அரசின் நிதியுதவியுடன் கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கும் ரூபாய். 6000 வழங்கும் ஒரு திட்டமாகும். இதன் மூலம் அவர்கள் தங்களையும், குழந்தையையும் கவனித்துக் கொள்ளலாம். இத்திட்டம் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் மாத்ரு சஹாயோக் யோஜனா என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டது. பின்னர் 2014 ஆம் ஆண்டில் பிஜேபி அரசு இதனை மாத்ரு சஹாஜ் யோஜனா என பெயரிட்டது. முன்னதாக இது இந்தியா முழுவதும் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய ஒரு திட்டமாகவே அமல்படுத்தப்பட்டது. பின்னர் இது பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (பிஎம்எம்விஒய்) என மாற்றி பெயரிடப்பட்டது. அங்கன்வாடி அமைப்பு மூலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்தினை அமல்படுத்துகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் குறிக்கோள்கள்
பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா பின்வருவனவற்றை குறிக்கோள்களாக கொண்டுள்ளது:
- கர்ப்ப காலம், பிரசவம், மற்றும் தாய்ப்பாலூட்டுதல் போன்றவை தொடர்பான உடல்நலம் சார்ந்த சிக்கல்கள் என்ன என்பதனை ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டும்.
- கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பாலுட்டும் தாய்மார்கள் போதுமான ஓய்வு எடுக்கவும், கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவும் ஊக்குவித்தல். தங்களது மற்றும் தங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அவர்களுக்கு போதுமான நிதியுதவி வழங்குதல்.
- தாய்-சேய் ஆகிய இருவரின் ஆரோக்கியத்தை ஊக்குவித்தல்.
பிஎம்எம்விஒய் மூலம் யாரெல்லாம் பலன் அடையலாம்?
பின்வரும் நபர்கள் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா மூலமாக பலன் பெறுவார்கள்:
- அனைத்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள்
- 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் அல்லது தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் இத்திட்டத்தின் பலன்களை அனுபவிக்கலாம்.
- மத்திய அல்லது மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் இதே போன்ற நன்மைகளைத் தரும் வேறொரு திட்டத்தின் மூலம் ஏற்கனவே பலன்களை அனுபவித்து வருபவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
பிஎம்எம்விஒய்-ன் பலன்கள்
பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் பலன்கள் பின்வருமாறு:
- இத்திட்டத்தின் கீழ், 6000 ரூபாயானது ரொக்க பணமாக மூன்று தவணைகளில் வழங்கப்படும்.
- கர்ப்பத்தை பதிவு செய்யும் சமயத்தில் முதல் தவணையாக 1000 ரூபாய் வழங்கப்படும்.
- கர்ப்ப காலத்தின் 6 மாதங்களுக்கு பின் மற்றும் பிரசவத்திற்கு முன்பாக 2000 ரூபாயான இரண்டாவது தவணை தரப்படும்.
- மூன்றாவது தவணையான 2000 ரூபாய் குழந்தை பிறந்த பின், குழந்தையின் பிறப்பை பதிவு செய்த பின்னர் மற்றும் குழந்தைக்கான முதல் தடுப்பூசி போடப்பட்ட பின் வழங்கப்படும்.
- மீதமுள்ள ரூபாய். 1000 பணம் பிரசவத்திற்கு பின்பாக ஜனனி சுரக்ஷா யோஜனா (ஜேஎஸ்ஒய்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள்
பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில் பதிவு செய்வதற்கு நீங்கள் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
- ஆதார் அட்டை இல்லாத பட்சத்தில் அடையாள அட்டையின் நகல்.
- விண்ணப்பதாரர் மற்றும் அவரது கணவர் கையொப்பமிட்ட ஒப்புதல் படிவம்.
- விண்ணப்ப படிவம் 1அ
- பிஎச்சி அல்லது அரசு மருத்துவமனையில் இருந்து பெற்ற எம்சிபி அட்டையின் நகல்.
பிஎம்எம்விஒய் திட்டத்தின் பலன்களைப் பெற ஆஃப்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் பலன்களைப் பெற இதற்கு ஆஃப்லைனில் விண்ணப்பிப்பதற்கான படிகள் பின்வருமாறு:
- பிஎம்எம்விஒய் மூலம் பலன் பெற நினைக்கும் தகுதி உடைய கர்ப்பிணி பெண்கள் அல்லது தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் அங்கன்வாடி அமைப்பு அல்லது ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற சுகாதார மையத்தில் முதலில் சென்று தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். இருப்பினும் தங்களின் எல்எம்பி ஏற்பட்ட 150 நாட்களுக்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும்.
- இதற்கான விண்ணப்பத்தை அவர்கள் அங்கன்வாடி அமைப்பு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற சுகாதார மையத்தில் இருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த விண்ணப்பத்தை ஆன்லைனில் டவுன்லோட் செய்ய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கான இணையதளத்தை பார்வையிடவும். பதிவு செய்ததற்கான இரசீதை பெற்றுக்கொள்வது அவசியம்.
- 6 மாத கர்ப்ப காலத்திற்கு பின் இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு, அங்கன்வாடி அமைப்பு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற சுகாதார மையத்தில் 1ஆ படிவத்தை முறையாக நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன் குறைந்தபட்சம் ஒரு கர்ப்பகால பரிசோதனை மேற்கொண்டதை காட்டும் எம்சிபி அட்டையின் நகல் மற்றும் 1அ படிவத்தின் ஒப்புகை இரசீதுக்கான நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். கர்ப்ப காலத்தின் 180 நாட்களை கடந்த பிறகு இரண்டாவது தவணையைப் பெற்றுக் கொள்ளலாம்.
- மூன்றாவது தவணையைப் பெறுவதற்கு, முறையாக நிரப்பி சமர்ப்பிக்கப்பட்ட 1இ படிவம் அவசியம். இதனுடன் தங்களது குழந்தை டிபிடி, ஓபிவி, சிஜி மற்றும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசிகளுக்கான முதல் சுழற்சியை பெற்றுவிட்டது என்பதைக் குறிக்கும் எம்சிபி அட்டையின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதலாக, படிவம் 1அ மற்றும் 1ஆ வினுடைய ஒப்புகை இரசீதுகளுக்கான நகல்களையும் சமர்ப்பித்தல் வேண்டும். ஜம்மு & காஷ்மீர், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா தவிர பிற மாநிலங்களின் விண்ணப்பதாரர்கள் அனைவரும் இந்த சமயத்தில் தங்கள் ஆதார் அட்டையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
பிஎம்எம்விஒய் திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கான ஆன்லைன் செயல்முறை என்ன?
பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான படிப்படியான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- https://pmmvy.nic.in/Account/Loginஎன்ற லிங்கை கிளிக் செய்து, திட்ட வழிநடத்துபவரின் உதவியைக் கொண்டு பிஎம்எம்விஒய் சாஃப்ட்வேரில் லாகின் செய்யவும்.
- படிவம் 1அ-வில் கேட்கப்பட்டுள்ள தேவையான அனைத்து தகவல்கள் மற்றும் விவரங்களை நிரப்பி, 'நியூ பெனிஃபிஷியரி' டேப் என்பதைக் கிளிக் செய்யவும். படிவத்தை நிரப்பும் போது பிஎம்எம்விஒய் சிஏஎஸ் பயனர் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள படிகளை பின்பற்றவும்.
- 6 மாத கர்ப்ப காலம் நிறைவு பெற்றதும் மீண்டும் பிஎம்எம்விஒய் சிஏஎஸ் சாஃப்ட்வேரில் லாகின் செய்யவும். 'செகண்ட் இன்ஸ்டால்மெண்ட்' டேப் என்பதை கிளிக் செய்து, பயனர் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளபடி 1ஆ படிவத்தை நிரப்பவும்.
- மூன்றாவது தவணையைப் பெற, குழந்தையின் பிறப்பை பதிவு செய்த பின்னரும், குழந்தைக்கான முதல் தடுப்பூசியைப் போட்ட பின்னும் மீண்டும் பிஎம்எம்விஒய் சிஏஎஸ் சாஃப்ட்வேரில் லாகின் செய்யவும். இன்ஸ்டால்மெண்ட் டேபை கிளிக் செய்து, 1இ படிவத்தை நிரப்பவும்.
இறந்து பிறந்த குழந்தை அல்லது அபார்ஷன் போன்றவற்றிற்கு ஏதேனும் பலன்கள் உண்டா?
இது போன்ற சூழ்நிலைகளில், முதல் தவணையின் நன்மைகளை பெறுநர் பெற்றிருந்தால், அப்பெண் எதிர்காலத்தில் கர்ப்பமாகும் போது இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணையைப் பெற்றுக் கொள்ளலாம்.
குழந்தை இறந்துவிட்டால் என்ன மாதிரியான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்?
பிஎம்எம்விஒய் திட்டத்தின் கீழ் பெறுநர் ஏற்கனவே அனைத்து மகப்பேறு பலன்களையும் பெற்றிருந்தால், குழந்தை இறந்து விடும் பட்சத்தில் மேற்கொண்டு எந்தவொரு பலன்களையும் அப்பெண் பெற முடியாது.
குறிப்பு: நீங்கள் ஏதேனும் புகாரைப் பதிவு செய்ய விரும்பினாலோ அல்லது இந்தத் திட்டம் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ அல்லது உங்கள் வீட்டின் அருகிலுள்ள சுகாதார மையம் அல்லது திட்டத்தைக் கண்டறிய உங்களுக்கு உதவி தேவைப்பட்டாலோ, தயவுசெய்து பிஎம்எம்விஒய் உதவி எண்: 011-23382393-யை அழைக்கவும்.